< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி

தினத்தந்தி
|
31 March 2023 5:50 PM IST

மீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சிறுவன்

மீஞ்சூர் அடுத்த வாயலூர் குப்பம், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குமார் (வயது 44). இவரது மகன் மோனேஷ் (10). இவர் நெய்தவாயல் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த நிலையில் சைக்கிளுக்கு பஞ்சர் போட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார். இதைதொடர்ந்து சக நண்பர்களுடன் சோர்ந்து மோனேஷ் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

குளத்தில் ஆழமான பகுதிக்கு மோனேஷ் சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கினார். இந்த நிலையில் சக நண்பர்கள் மோனேஷை நீண்ட நேரம் தேடி பார்த்து விட்டு அவர் எங்கேயோ சென்று விட்டார் என்று நினைத்து அனைவரும் வீட்டுக்கு சென்ற விட்டனர். ஆனால் நண்பர்கள் குளத்தில் குளிக்க சென்ற சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.

குளத்தில் மூழ்கி பலி

நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு மோனேஷ் வராததால் பதறிபோன பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்கவில்லை. எனவே அவர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊர் மக்கள் குளத்தின் அருகே சைக்கிள் இருப்பதாகவும், குளத்தின் ஆழமான பகுதியில் மோனேஷ் இறந்து மிதப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து பெற்றோர் மற்றும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் பள்ளி மாணவன் மோனேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தந்தை குமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வாயலூர் குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்