திருச்சி
நர்சிங் கல்லூரி பெண் ஊழியரிடம் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
|நர்சிங் கல்லூரி பெண் ஊழியரிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நர்சிங் கல்லூரி பெண் ஊழியரிடம் 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் ஊழியர்
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரியா (வயது 35). இவர் திருச்சியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனி பகுதியில் உள்ள கராத்தே பள்ளியில் கராத்தே கற்று வருகிறார்.
இதனால் தினமும் வீட்டில் இருந்து தனது மகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, கராத்தே பள்ளியில் விடுவார். பின்னர் வகுப்பு முடிந்ததும், தனது மகனை அழைத்துக்கொண்டு செல்வார். வழக்கம் போல் நேற்று மாலையும் தனது மகனை கராத்தே வகுப்புக்கு அழைத்துவந்து விட்டார்.
தாலி சங்கிலி பறிப்பு
பின்னர், இருசக்கர வாகனத்தை கராத்தே பள்ளி அருகே நிறுத்திவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு தனது மகனை அழைப்பதற்காக மீண்டும் கராத்தே பள்ளி நோக்கி நடந்து சென்றார். அப்போது, அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம வாலிபர்கள் வந்தனர்.
அதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், சிவப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சிவப்பிரியா, திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், இருவரும் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்தனர்.
மேலும் இதுகுறித்து சிவப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரியாவிடம் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.