< Back
மாநில செய்திகள்
வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
21 April 2023 2:59 AM IST

வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆத்திநாட்டார். விவசாயி. இவரது மனைவி காமாட்சி(வயது 60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஆத்தி நாட்டார் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது காற்றுக்காக அவர்கள் கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், காமாட்சி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் குண்டுகளை பறித்தனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுள்ளார்.

வலைவீச்சு

இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் காமாட்சி நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு

*திருச்சி காஜாமலை முகமதுநகரை சேர்ந்தவர் முகமதுயாசர்அரபத் (40). இவர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள வணிக வளாத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவருடைய கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், கடையில் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி வயர்லெஸ் சாலையில் ஓலையூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் அருள்ேஜாதி (34) என்பவர் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள், திருச்சி கூனிபஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முகமது ரியாசின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயங்கி விழுந்த டிரைவர் சாவு

*ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). டிரைவரான இவர், திருச்சியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார். குடும்பத்தகராறு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்த ராஜ்குமார் சம்பவத்தன்று நள்ளிரவு தான் வேலை பார்த்து வந்த கடையின் குடோனில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்