திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டை அருகே உடலில் வெந்நீர் கொட்டி 10 மாத குழந்தை சாவு
|ஆர்.கே.பேட்டை அருகே குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் 10 மாத குழந்தை உடலில் கொட்டி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அமுதா ரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகரன் (வயது 30). இவரது மனைவி ராஜம்மாள் (33). இவர்களுக்கு ஸ்வேதா (வயது 4) என்ற பெண் குழந்தையும், சர்வேஷ் என்ற பத்து மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
கடந்த மாதம் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி ராஜம்மாள் தனது மகன் சர்வேசை குளிக்க வைப்பதற்காக குளியல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து விட்டு சோப்பை எடுப்பதற்காக பக்கத்து அறைக்கு சென்றார்.
அப்போது குழந்தை சர்வேஷ் சூடான வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்தான். அப்போது அதிலிருந்த வெந்நீர் குழந்தை மீது கொட்டியது. வலியால் அலறி துடிக்கும் சத்தம் கேட்டு ராஜம்மாள் ஓடி வந்து பார்த்தார். வெந்நீர் உடலில் கொட்டிய காயத்துடன் குழந்தை துடித்து கொண்டிருந்தது. உடனே குழந்தையை உறவினர்களின் உதவியுடன் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை அனுப்பபட்டது. அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை சுதாகரன் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.