< Back
மாநில செய்திகள்
முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

தினத்தந்தி
|
13 Jan 2023 4:55 PM IST

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று படிக்கட்டுகளில் இருப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

திருத்தணியில் முருகன் கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் புனித நீராடிய பின்பு மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிப்படுவர். இதுதவிர ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவின் போது, இந்த குளத்தில் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் கோவில் குளத்தில் உள்ள குழாய் மூலம் குளிப்பதற்காக சரவண பொய்கை படிக்கட்டுகளில் இறங்கியுள்ளனர். அப்போது தண்ணீரில் நீந்தியபடி சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று படிக்கட்டுகளில் இருப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து முருகன் கோவில் நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோவில் குளத்தில் உள்ள மலைப்பாம்பை மூன்று மணி நேரம் தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை. பாம்பு குளத்தில் இருந்து ஏதாவது ஒரு வழியில் வெளியேறி இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்