சென்னை
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை சாவு
|பெரம்பூரில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் அகரம் சின்னசாமி தெருவில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுடைய மகன் ஸ்ரீமோனிஷ்(வயது 3½). இந்த தம்பதிக்கு 1½ வயதில் பிரகன்யா ஸ்ரீ என்ற மகளும் இருந்தாள்.
நேற்று மாலை வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிரகன்யா ஸ்ரீயை திடீரென காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தேடினர்.
அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் வாளிக்குள் குழந்தை பிரகன்யா ஸ்ரீ, தலைகுப்புற கவிழ்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பெரவள்ளூர் பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பிரகன்யா ஸ்ரீ வரும் வழியே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வீட்டில் விளையாடிய குழந்தை, குளியல் அறைக்குள் சென்று தண்ணீர் இருந்த வாளிக்குள் தவறி தலை குப்புற விழுந்ததில் மூச்சுத்திணறி இறந்து விட்டது என தெரிந்தது.
இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.