< Back
மாநில செய்திகள்
நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாப சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாப சாவு

தினத்தந்தி
|
11 Jan 2023 1:15 AM IST

பரமத்திவேலூர் அருகே நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் அருகே நார் மில் எந்திரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

நார் மில்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சுராம் (வயது 36). இவருடைய மனைவி மனிஷா தேவி. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தில் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்து எடுக்கப்படும் மில்லில் வேலை செய்து வருகின்றனர்.

பஞ்சுராம் வழக்கம் போல் நேற்று மாலை நார் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வந்த அவருடைய மனைவி மனிஷாதேவி, தங்களது 1½ வயது குழந்தை தீஷ்குமாரையும் அழைத்து வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார் அருகில் ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தில் சிக்கி உள்ளது.

ஆஸ்பத்திரியில் சாவு

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு கணவன்- மனைவி இருவரும் ஓடி சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்களது குழந்தையை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடனே குழந்தையின் உடலை பார்த்து கணவன்- மனைவி இருவரும் கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்