< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு
கரூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை சாவு

தினத்தந்தி
|
22 Jun 2023 7:27 PM GMT

கரூர் அருகே தாயின் கண் முன்ேன கிணற்றில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

குடும்ப பிரச்சினை

கரூர் மாவட்டம் புகழூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 35). இவர் காகித ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தாதேவி (27). இவர் தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதிக்கு மித்ரேஷ்வரன் (1½) என்ற ஆண் குழந்தை இருந்தது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினைஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கிணற்றில் விழுந்த குழந்தை

இதனால் கோபித்துக் கொண்ட பிருந்தாதேவி இரவு 12 மணியளவில் மகன் மித்ரேஷ்வரனை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் முன்பு குடியிருந்த புகழிமலைக்கு வந்துள்ளார். அப்போது குழந்தையை கீழே இறக்கி விட்டு ஸ்கூட்டரை நிறுத்தி கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த கிணற்றுக்குள் மித்ரேஷ்வரன் நிலை தடுமாறி விழுந்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தாதேவி அக்கம், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து மித்ரேஷ்வரனை காப்பாற்ற முயற்சி செய்தார். இருப்பினும் குழந்தை கிணற்றில் மூழ்கி விட்டது.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி மித்ரேஷ்வரனை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் மித்ரேஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பிருந்தாதேவி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்