< Back
மாநில செய்திகள்
தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்
சென்னை
மாநில செய்திகள்

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தினத்தந்தி
|
12 Jun 2022 9:43 AM IST

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர், தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூர் விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவருடைய மகன் தீபக் (வயது 15). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் குன்றத்தூர் மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் மணிமாறன் வீட்டுக்கு தம்பி விக்னேசுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

மணிமாறனுக்கு குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டுக்குள் சேலையால் தொட்டில் கட்டி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு மணிமாறன் தனது மனைவி, குழந்தையுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்துக்கொண்டார்.

தீபக், அவரது தம்பி விக்னேஷ் இருவரும் தொட்டில் கட்டி உள்ள அறையில் இருந்தனர். இரவு மணிமாறன் அந்த அறைக்குள் எழுந்து சென்று பார்த்தபோது தீபக் குழந்தைக்கு ெதாட்டில் கட்டிய சேலையில் கழுத்து இறுகிய நிலையில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தீபக்கை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபக், குழந்தைக்கு கட்டிய தொட்டிலில் விளையாடும் போது சேலை கழுத்தை இறுக்கியதால் இறந்துபோனது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்