செங்கல்பட்டு
பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
|படிக்காமல் விளையாட செல்கிறாயே? என பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தாம்பரம்,
9-ம் வகுப்பு மாணவன்
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். மெக்கானிக். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.
இதில் இவர்களுடைய மகன் சிவசக்தி (வயது 16) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சிவசக்தி, படிப்பில் கவனம் செலுத்தாமல், அடிக்கடி வெளியில் சென்று விளையாடிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்றும் வழக்கம் போல் விளையாடிவிட்டு வீ்்ட்டுக்கு வந்த சிவசக்தியை, "இப்படி படிக்காமல் விளையாட சென்று விட்டு வருகிறாயே?" என அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவசக்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தனது மகன் சிவசக்தி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.