கன்னியாகுமரி
கேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
|குமரியில் 2 இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கடை போலீசார் ே்நற்று முன்தினம் இரவு பார்த்திபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு போலீசாா் சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் டிரைவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் சோதனை நடத்தியபோது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 பிளாஸ்டிக் கேன்களில் 300 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மண்எண்ணெயை பறிமுதல் செய்த போலீசார் அதனை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுபோல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலையில் குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அல்போன்சா காலனியில் உள்ள பழைய உப்பளம் அருகில் படகுகளுக்கு அரசு மானியத்தில் வழங்கும் வெள்ளை மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 22 கேனில் மொத்தம் 660 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இந்த மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ், ரீட் மேரி ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.