< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம்
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம்

தினத்தந்தி
|
1 Aug 2024 4:59 PM IST

சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வருகையை அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் சார்பில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 95.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எப்போதும் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, சிறப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த பயணத்தை வழங்க முயற்சிக்கிறது. கடந்த 01.07.2024 முதல் 31.07.2024 வரை மொத்தம் 95,35,019 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024 ஜூன் மாதத்தை விட 2024 ஜூலை மாதத்தில் 11,01,182 பயணிகள் கூடுதலாக மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளனர். குறிப்பாக ஜூலை 12, 2024-ல் அதிகபட்சமாக 3,50,545 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் 20% தள்ளுபடி வழங்குகிறது (மெட்ரோ பயண அட்டை, மொபைல் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் - சிங்கிள், ரிட்டன், குழு டிக்கெட்டுகள் மற்றும் கியூ.ஆர். பயண பாஸ்கள், வாட்ஸ் அப், பேடிஎம் மற்றும் போன்பே). பயணிகள் இப்போது வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மற்றும் paytm மூலமாகவும் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்