சென்னையில் இருந்து இன்று 950 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
|சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ஆயுத பூஜை பண்டிகை இந்த ஆண்டு வரும் 23-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறையும் சேர்ந்து வருவதால், பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்வதற்காக அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நேற்றைய தினம் 2,100 தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 651 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த பேருந்துகளில் சுமார் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். அதே போல் இன்று கூடுதலாக 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.