< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் தேர்ச்சி; மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி
மாநில செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் தேர்ச்சி; மாணவர்களை விட மாணவிகளே அதிகம் வெற்றி

தினத்தந்தி
|
9 May 2023 5:56 AM IST

பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவ-மாணவிகள் மட்டும் தேர்வை எழுதினர்.

செல்போனுக்கு மதிப்பெண்

தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்வு முடிவு வெளியிட்டதும், மாணவ-மாணவிகள் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் அனுப்பப்பட்டன. மேலும் அவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும் தங்கள் மதிப்பெண்ணை பார்த்தனர்.

94.03 சதவீதம் பேர் தேர்ச்சி

தேர்வு எழுதிய 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகள், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேரில், 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகள், 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45. வழக்கம்போல, இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது. அதன்படி, 4.93 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தேர்வு முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 767 ஆகும். இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 326. கடந்த ஆண்டைவிட அதிகமான எண்ணிக்கையில் 100 சதவீதம் பள்ளிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்

பள்ளி வகைப்பாடுகளின் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும் போது, அரசு பள்ளிகளில் 89.8 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.99 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.08 சதவீதமும், இருபாலர் பள்ளிகளில் 94.39 சதவீதமும், பெண்கள் பள்ளிகளில் 96.04 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 87.79 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் அதிகரித்து இருக்கிறது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்திலும், பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்கள் அதற்கடுத்த இடங்களிலும் உள்ளது.

பாடப்பிரிவுகளின் தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரையில் அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.32 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 81.89 சதவீதமும், தொழிற்பாடப்பிரிவுகளில் 82.11 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முக்கிய பாடங்களை எடுத்துக்கொண்டால், இயற்பியலில் 97.76 சதவீதமும், வேதியியலில் 98.31 சதவீதமும், உயிரியலில் 98.47 சதவீதமும், கணிதத்தில் 98.88 சதவீதமும், தாவரவியலில் 98.04 சதவீதமும், விலங்கியலில் 97.77 சதவீதமும், கணினி அறிவியலில் 99.29 சதவீதமும், வணிகவியலில் 96.41 சதவீதமும், கணக்கு பதிவியலில் 96.06 சதவீதமும் தேர்ச்சி வந்துள்ளது.

100-க்கு 100 மதிப்பெண்

தேர்ச்சி முடிவில் ஒவ்வொரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழில் 2 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3 ஆயிரத்து 909 பேரும், உயிரியலில் 1,494 பேரும், கணிதத்தில் 690 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணினி அறிவியலில் 4 ஆயிரத்து 618 பேரும், வணிகவியலில் 5 ஆயிரத்து 678 பேரும், கணக்கு பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேரும், பொருளியலில் 1,760 பேரும், கணினி பயன்பாடுகளில் 4 ஆயிரத்து 51 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 1,334 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 8 ஆயிரத்து 544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வை மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 398 பேர் எழுதினார்கள். இவர்களில் 3 ஆயிரத்து 923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் சிறைவாசிகளாக இருந்து 90 பேர் தேர்வு எழுதியதில், 79 பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

திண்டுக்கல் மாணவி சாதனை

பிளஸ்-2 தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியான திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி சாதனை படைத்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ஆகிய பாடங்களி்ல் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அவர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஆரத்தி எடுத்து...

இதுபற்றி அறிந்த மாணவி நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவி தனது பெற்றோருடன் பள்ளிக்கு வந்தார். அவரது நண்பர்கள், உறவினர்களும் அங்கு வந்திருந்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை பள்ளி வளாகத்தில் நிறுத்தி ஆரத்தி எடுத்து, பூசணிக்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போட்டனர்.

மாணவியின் பெற்றோரும், தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே சாதனை மாணவி நந்தினியை, தனது வீட்டுக்கு வரவழைத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி வாழ்த்து தெரிவித்தார்.

தச்சுத்தொழிலாளியின் மகள்

சாதனை மாணவி நந்தினின் தந்தை சரவணக்குமார் தச்சுத்தொழிலாளி ஆவார். அவரது தாய் பானுப்பிரியா இல்லத்தரசி. தம்பி பிரவின்குமார், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி நந்தினி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 491 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். தமிழ் பாடத்தில் அவர் 99 மதிப்பெண்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காலிக சான்றிதழ்

வருகிற 12-ந் தேதி (வெள்ளிக் கிழமை) முதல் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அசல் சான்றிதழ் வருவதற்கு ஒரு மாதம் வரை ஆகும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், விடைத்தாள் நகல் பெறுபவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்திருக்கிறது.

தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வை எழுதாத மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்