புதுக்கோட்டை
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.81 சதவீதம் பேர் தேர்ச்சி
|புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் வெற்றி பெற்றனர்.
92.81 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 932 மாணவர்களும், 10 ஆயிரத்து 191 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 123 பேர் எழுதியிருந்தனர்.
இதில் 8 ஆயிரத்து 22 மாணவர்களும், 9 ஆயிரத்து 727 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 749 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 92.81 சதவீதம் ஆகும். தேர்ச்சியில் மாணவர்கள் 89.81 சதவீதமும், மாணவிகள் 95.45 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் வெற்றி பெற்றனர்.
ஆன்லைனில் தேர்வு முடிவுகள்
கடந்த ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் பலர் தங்களது செல்போனிலே பார்த்து மதிப்பெண்கள் விவரத்தை பாட வாரியாக தெரிந்து கொண்டனர். இதேபோல் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து மதிப்பெண்கள் விவரத்தை அறிய வரவில்லை. இருப்பினும் ஒரு சில மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து தங்களது மதிப்பெண்கள் விவரத்தை அறிந்ததோடு, ஆசிரியர்களையும் பார்த்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் அறிவிப்பு பலகையிலும் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டிருந்தது. இதனையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 106 பள்ளிகளில் 90.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2022-ம் ஆண்டில் 88.73 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த ஆண்டு 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு பள்ளி சேர்த்து மொத்தம் 9 அரசு பள்ளிகளாக எண்ணிக்கை உயர்ந்தது.
மாநில அளவில் 23-வது இடம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் 23-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் மாநில அளவில் 29-ம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்திருந்ததால் மாநில அளவிலான பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
பாட வாரியாக 883 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் மொத்தம் 883 பேர் பெற்றிருந்தனர். பாடவாரியாக பெற்ற மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
இயற்பியல்-7, வேதியியல்-39, உயிரியியல்-23, தாவரவியல்-7, விலங்கியல்-5, கணினி அறிவியல்-43, புவியியல்-41, கணிதம்-7, வரலாறு-14, பொருளியியல்-12, வணிகவியல்-44, கணக்குப்பதிவியல்-45, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்-4, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்-27, அடிப்படை எலக்ட்ரிக்கல்-25, அடிப்படை எலக்ட்ரானிக்ஸ்-10, நர்சிங்-9, டெக்ஸ்டைல்ஸ் அன்ட் டிரஸ்-94, கம்ப்யூட்டர் டெக்னாலஜி-2, வேளாண்மை அறிவியல் தியரி- 12, வேளாண்மை அறிவியல்-204, ஆடிட்டிங்-209.