கரூர்
928 அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் ஆய்வு
|புலியூர், தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டு வரும் 928 அடுக்குமாடி குடியிருப்புகளை மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கான திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், தகுதியான பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடுகளை விரைந்து கொடுப்பது குறித்தும், குடியிருப்புடன் கூடிய நலச்சங்ம் உருவாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குடிநீா் சீராக வழங்க வேண்டும்
மேலும் திட்டப்பகுதி உள்ள வளர்ச்சி பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் குடிநீர் சீராக வழங்கவும், சாலை, பஸ் வசதி மற்றும் பிற அடிப்படை வசதியை மேம்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்தினருடனும், பிறதுறை அலுவலர்களுடனும் இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், பயனாளிகளுக்கு பங்களிப்பு செலுத்த வங்கிகடனுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யவும், வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் ஒவ்வொரு காலாண்டுக்கும் மாவட்ட மேம்பாட்டுக்குழு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், மாவட்டவருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் ரவிக்குமார், மின்வாரி அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு
முன்னதாக கரூர் மாவட்டம், புலியூர் மற்றும் நேருநகர் தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டு வரும் 928 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ் ஆய்வு செய்தார். மேலும் பாலாம்பாள்புரம் திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 144 அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்து வரும் பயனாளிகளிடம் குடிநீர்வசதி, மின்சாரவசதி ஆகியவை சீராக பெறப்படுகிறதா எனவும், மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அடிப்படைவசதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனுக்குடன் வாரியத்தின் மூலம் சீர்செய்து தரப்படும் என குடியிருப்போரிடம் தெரிவித்தார்.