அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க 90 சதவீதம் பணிகள் நிறைவு - வி.கே.சசிகலா பேட்டி
|ஜெயலலிதாவின் புகைப்படம் தற்போது பலருக்கும் தேவைப்படுகிறது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் வி.கே.சசிகலா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிகழ்ந்த போது, ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் அதன் பிறகு விஷ சாராய மரணங்கள் நிகழவில்லை.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. காவல் துறையை இயக்குவோர் சரியாக இல்லை. இது போன்ற அரசாங்கம் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. இதை திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் இதுவரை சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை. கடந்த 2 மாதமாக ரேஷன் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் 2 கோடி 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.
1 கோடியே 18 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் வழங்கப்படுகிறது. இதை ஏழை, நடுத்தர மக்கள்தான் வாங்குகின்றனர். கடந்த 2 மாதமாக இவர்களுக்கு இதெல்லாம் வழங்கப்படவில்லை. தேர்தல் நடைமுறை வந்ததால் ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் என்பது அரசுக்கு முன்னமே தெரியாதா? எதற்கு அவர்கள் அமைச்சர்களாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது சாக்கு போக்குச் சொல்லும் விஷயம் இல்லை. இதனால் 1 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் பாதிக்கிறது. இதை எல்லாம் கேட்பதற்கு சரியான ஆள் சட்டப்பேரவையில் இல்லை. அதனால் நாம் வைத்தது தான் சட்டம் என்ற மனநிலையில் தி.மு.க.,வினர் உள்ளனர். இவர்களுக்கு முடிவு கட்டுவதுதான் என்னுடைய வேலை. அதன் தொடக்கம் தான் எனது பயணம். மக்களை சந்தித்து, மக்களோடு உரையாடி பேசினால் தான் இதற்கு ஒரு முடிவு வரும். அ.தி.மு.க. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது தவறு.
தி.மு.க. அரசு சரியாக செயல்படவில்லை. அதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே இருப்பது தான் நியாயம். இந்த அரசு வந்ததிலிருந்து 14, 15 வயது உடையவர்கள் எல்லாம் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். தமிழக மக்கள் 2026 தேர்தலில் நல்ல முடிவை தர வேண்டும். தி.மு.க. அரசு நடத்திவரும் கோடநாடு கொலை வழக்கு விசாரணை மீதும், அது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அளித்த பதில் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார். நீட் விவகாரத்தில் தி.மு.க. போடுவது பகல் வேஷம். தி.மு.க.,வினர் மக்களையும் வாக்களிப்பவர்களையும் பிச்சைக்காரர்களாகத்தான் நடத்துவார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பில் 90 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஜெயலலிதா ஆட்சியின் போது, அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.