கன்னியாகுமரி
தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
|மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது 44). இவர் நட்டாலத்தில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்காக தினமும் தனது ஸ்கூட்டரில் செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்று லேகா வழக்கம்போல் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற அவர் மாலையில் வீடு நோக்கி புறப்பட்டார். மாமூட்டுக்கடை-பழைய கடை சாலையில் நெட்டியான்விளை பகுதியை சென்றடைந்த போது, அவருக்கு பின்னால் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம ஆசாமி வந்தார்.
அந்த சமயத்தில் திடீரென லேகாவின் ஸ்கூட்டர் மீது அவர் வேண்டுமென்றே மோட்டார் சைக்கிளால் மோதினார். இதில் லேகா நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார்.
இதில் லேகாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அந்த ஆசாமி லேகாவின் கன்னத்தில் தாக்கி விட்டு அவரது கழுத்தில் கிடந்த கிடந்த 9 பவுன் நகையை பறித்தார்.
அதிர்ச்சி அடைந்த ேலகா திருடன், திருடன் என அலறினார். உடனே சத்தம் ேகட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஆசாமி அங்கிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி சென்றார். ஆனால் பொதுமக்கள் ஆசாமியை விடாமல் பின்னாலேயே துரத்தினர். ஒரு கட்டத்தில் மடக்கி பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மார்த்தாண்டம் அருேக உள்ள அரியூர்கோணம் பகுதிைய சேர்ந்த சங்கர் (33) என்பதும், மரவேலை செய்து வருவதும் தெரியவந்தது.
லேகாவிடம் நகையை பறித்த சங்கர், தப்பிக்க முயன்ற போது வரும் வழியில் ஒரு தோப்பில் நகையை வீசியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துச் சென்று நகையை மீட்டனர்.
மேலும் இதுதொடர்பாக சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர்.
தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்து சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.