< Back
மாநில செய்திகள்
விடுதி புகுந்து கொள்ளை-வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

விடுதி புகுந்து கொள்ளை-வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது

தினத்தந்தி
|
11 Oct 2022 2:20 AM IST

விடுதி புகுந்து கொள்ளை-வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதிக்குள் புகுந்து கொள்ளை

கன்னியாகுமரி கண்ணன் குளம் பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் அபினன் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக பொன்மலை அணுகு சாலையில் உள்ள ஒரு விடுதியில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து கடந்த 3 வாரங்களாக தங்கி உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அபினன் தனது அறையில் இருந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கி 2 மடிக்கணினிகள், 4 ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி அவர், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

4 பேர் கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அபினனிடம் மடிக்கணினி, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றது பாலக்கரை பீமநகரை சேர்ந்த கிருபாகரன் (21), பிரவீன் (24), சிமியோன் (21), அருண்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கத்தி முனையில் வழிப்பறி

இதேபோல் திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே சிந்தாமணி பஜார் பூசாரி தெரு சந்திப்பு பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அங்கு வந்த 4 பேர் கத்தி முறையில் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி அவருடைய சட்டைப்பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துச்சென்றனர்.

இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணமூர்த்தியிடம் பணத்தை பறித்துச்சென்றது, திருச்சி ஜீவா நகரை சேர்ந்த ரவிக்குமார் (41), சிந்தாமணியை சேர்ந்த குமரேசன் (34), வடிவேலு (20), கீழப்புலிவார்டு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அண்ணாமலை (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி மற்றும் ரூ.250-ஐ பறிமுதல் செய்தனர்.

விடுதி புகுந்து கொள்ளை-வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது

மேலும் திருச்சி தென்னூர் இமாம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாலிக் அலி (48). இவர் தென்னூர் அண்ணாநகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, இவர் சாஸ்திரி சாலை பகுதியில் நடந்து சென்றபோது, ஒருவர் கத்தி முனையில் மாலிக்அலியிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துச்சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாலிக் அலியிடம் பணத்தை பறித்து சென்றது எடத்தெருவை சேர்ந்த அன்சாரி (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.120 மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்