சென்னை
கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
|பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயுதபூஜையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், அதேபோல் வெளியூர்களில் வசிப்பவர்கள் சென்னைக்கும் அதிகளவில் பயணம் செய்வார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஆம்னி பஸ்களை கண்காணிக்க போக்குவரத்து கமிஷனர் சண்முக சுந்தரம், இணை கமிஷனர் முத்து ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஏழுமலை, தங்கராஜ், ராஜசேகரன், ரவிக்குமார், ராஜேந்திரன், ஜெய்கணேஷ், ஹமீதா பானு, செல்வி, முரளி, முகுந்தன் ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் கத்திப்பாரா, மீனம்பாக்கம், பரனூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் கோவை, மதுரை திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தனர்.
அப்போது பயணிகளிடம் சென்னைக்கு வருவதற்காக கோவையில் இருந்து ரூ.2,950, மதுரையில் இருந்து ரூ.1,700, திருச்சியில் இருந்து ரூ.1,100, கன்னியாகுமரியில் இருந்து ரூ.2,400, நெல்லையில் இருந்து ரூ.2,100 என கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிந்தது. சாதாரண நாட்களைவிட 2 மடங்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து சென்னை அழைத்து வந்ததாக போக்குவரத்து அதிகாரிகளிடம் பயணிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 9 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பஸ்சில் வந்த பயணிகளை, அவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பறிமுதலான 9 ஆம்னி பஸ்களும் பரங்கிமலையில் உள்ள மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொடர் சோதனை விடுமுறை காலம் முடியும் வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.