< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மண்டபம் மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

நடு்க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்ைக கடற்படை சிறைபிடித்தது.

பனைக்குளம்,

நடு்க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்ைக கடற்படை சிறைபிடித்தது.

9 மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று முன்தினம் வடக்கு கடல் பகுதியான பாக்ஜல சந்திக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதில் வேல்முருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்களை, இலங்கையின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பெயர் விவரம் தெரியவந்தது. அதாவது, மண்டபம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 38), ஆறுமுகம் (45), மணிகண்டன் (45), குமார் (45), ஜெயசீலன் (55), வேலு (55), முத்துஇருளாண்டி, நல்லதம்பி, சிவத்தபொடியான் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.கைதான மீனவர்கள் 9 பேரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதானவர்களை ஆகஸ்டு 8-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் விடுவிக்கப்பட்டனர். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மண்டபம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அடாவடி நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்