< Back
மாநில செய்திகள்
பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளை: முக்கிய குற்றவாளியின் மனைவி கைது
மாநில செய்திகள்

பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகை கொள்ளை: முக்கிய குற்றவாளியின் மனைவி கைது

தினத்தந்தி
|
19 March 2023 10:53 PM GMT

பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியின் மனைவி மற்றும் உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 10-ந்தேதி வெல்டிங் எந்திரத்தால் ஷட்டரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இது தொடர்பாக திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

கர்நாடக மாநில போலீசார் உதவியுடன் முக்கிய குற்றவாளியான கங்காதரன், ஸ்டீபன், திவாகர் மற்றும் கஜேந்திரன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் திவாகர், கஜேந்திரன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஸ்டீபன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

2-வது முறையாக காவல்

முக்கிய குற்றவாளியான கங்காதரனை 2-வது முறையாக தனிப்படை போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் அன்புகரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கங்காதரனை பெங்களூரு அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து கங்காதரனுடன் அவருடைய மனைவி கீதா (26) மற்றும் உறவினர் ராகவேந்திரா (25) ஆகிய 2 பேரையும் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் தங்கம், கொள்ளைக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

மனைவி கைது

உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக முக்கிய குற்றவாளி கங்காதரனின் மனைவி கீதா மற்றும் உறவினர் ராகவேந்திரா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள அருண் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரை பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த கொள்ளை வழக்கில் இதுவரை போலீசார் மொத்தம் 5 கிலோ 100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்