கோடநாடு பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட 9 பொருட்கள் உதகை கோர்ட்டில் ஒப்படைப்பு
|கொலை, கொள்ளை நடந்த கோடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.
இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை, கொள்ளை நடந்த கோடநாடு பங்களாவில் இருந்து 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளனர். கோடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை, ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கோடநாடு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள 8 செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.