பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை; கல்வித்துறை தகவல்
|1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
சென்னை,
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சில பள்ளிகளில் அங்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை, மாலையில் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 15-ந்தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்த ஆண்டு அட்டவணையில் டிசம்பர் 23-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரையில் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அரையாண்டு தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படியே விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தது.