கள்ளக்குறிச்சி
குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிப்பு
|திருக்கோவிலூரில் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்ட குறுகியகாலத்தில் 9 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தெரிவித்தார்
திருக்கோவிலூர்
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
கூடுதல் போலீசார் நியமனம்
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை 9 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளும் விரைந்து கண்டுபிடித்து பொருட்களும் மீட்கப்படும். திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு கூடுதலாக ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கூடுதல் போலீசார் வரும்போது திருக்கோவிலூருக்கு கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். பொது இடங்களில் போலீசார் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மதிக்கக் கூடிய வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
வழக்கை விரைந்து முடிக்க...
ஒரு வழக்கை பதிவு செய்யும்போது குற்றவாளிகளை கைது செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். சாட்சிகளை சரிவர கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் இருந்தால் அதை உடனடியாக செயல்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். சாலையோரம் தள்ளு வண்டி வியாபாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் போலீசாரின் நடவடிக்கை இருக்க வேண்டும். இரவு ரோந்து பணியின் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விபத்து இல்லாத பகுதியாக...
அதேபோல் போக்குவரத்து போலீசாரும் கவனமாக செயல்பட்டு விபத்து இல்லாத பகுதியாக திருக்கோவிலூரை உருவாக்கும் வகையில் செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தையும் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி உள்ளேன். அங்குள்ள போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு தேவையான இடம் குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி உடன் இருந்தார்.