திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் சாவு
|ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி செல்வி. மகன் பூபதி (வயது 14) அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபதி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடிவந்தனர். அப்போது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாய் கரையோரம் பூபதியின் செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் அவர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கியபோது வெள்ளத்தில் அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூபதியை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய பூபதியை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பூண்டி ஏரி அருகே கிருஷ்ணா தண்ணீர் சேரும் இடத்தில் நேற்று காலை பூபதி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் பூபதியின் அண்ணன் தருண் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகி இருந்தார். இப்போது அதே போல் பூபதியும் இறந்துவிட்டார். 2 மகன்களையும் கிருஷ்ணா கால்வாயில் பறிகொடுத்த ரமேஷ் - செல்வி தம்பதியினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்