செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
|சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம்,
சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் சினிவாச கிருஷ்ணகுமார். சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி(வயது 20) என்ற மகளும், ஸ்ரீராம் (வயது14) என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். சமீப காலமாக ஸ்ரீராம் படிப்பில் கவனம் செலுத்தாமல் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மகனின் எதிர்காலத்தை கருதி தாய் அவரை கண்டித்தார்.
நேற்று இரவும் அது போலவே சிறுவன் ஸ்ரீராம் பாடம் படிக்காமல் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடினான். இதனைக் கண்ட அவனது தாய் தொடர்ந்து கேம் விளையாடுவதால்தான் படிப்பில் கவனம் செலுத்தாமல் மதிப்பெண் குறைகிறது என மகனை கண்டித்தார்.
இதனால் மன விரக்தியடைந்த சிறுவன் ஸ்ரீராம், வீட்டில் இருந்த அனைவரும் தூங்கச் சென்ற நேரத்தில் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தான். இதில் படுகாயமடைந்து வலியால் துடித்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.