பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை... துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை
|பள்ளிக்கு செல்லும்படி தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி அம்மாபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாப்புக்குட்டி (வயது 41). இவர்களுக்கு ஐஸ்வர்யா (17), இந்துமதி (13) ஆகிய 2 மகள்கள். அருண்குமரன் (10) என்ற மகனும் உள்ளார். ஐஸ்வர்யா 12-ம் வகுப்பும், இந்துமதி 8-ம் வகுப்பும், அருண்குமரன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
மாணவி இந்துமதி சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் பள்ளிக்கு செல்லுமாறு இந்துமதியிடம் பாப்புக்குட்டி கூறி இருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். தாய் கண்டித்ததால் மனவருத்தம் அடைந்த சிறுமி இந்துமதி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சற்று நேரம் கழித்து பாப்புக்குட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மகள் தற்கொலை செய்தது குறித்து கணவர் பாலமுருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, தானும் தற்கொலை செய்யப்போவதாக கூறி இணைப்பை துண்டித்தாராம்.
இதனால் பதற்றம் அடைந்த பாலமுருகன், உடனடியாக வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டிற்குள் மனைவி பாப்புக்குட்டியும், மகள் இந்துமதியும் தூக்கில் பிணமாக கிடந்த காட்சியை பார்த்து அலறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாரனேரி போலீசார், தாய்-மகள் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.