< Back
மாநில செய்திகள்
8-ம் நூற்றாண்டு சிலை கண்ெடடுப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

8-ம் நூற்றாண்டு சிலை கண்ெடடுப்பு

தினத்தந்தி
|
11 July 2023 3:22 AM IST

திருச்சுழி அருகே 8-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.

காரியாபட்டி,

திருச்சுழி அருகே 8-ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.

பழமையான சிற்பங்கள்

திருச்சுழி தாலுகா முக்குளம் அருகே சிறுவனூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டி, நடராஜன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரான ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள சிற்பங்களை ஆய்வு செய்த போது அது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் சிற்பங்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

இங்கு காணப்படும் திருமால் சிற்பமானது 4 அடி உயர கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கண்களை பாதியளவு மூடிய படியும், உதடுகளில் சிறிய புன்னகையுடன் முற்கால பாண்டியருக்கே உரிய கலைநயத்துடன் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக பணி

பத்மநிதி சிற்பம் பொதுவாக சிவன் கோவிலின் கோபுரங்களின் மேல் வைப்பது வழக்கம். பத்மநிதி என்பவர் குபேரனின் பணியாட்களில் ஒருவர். அதாவது சங்க நிதி, பத்மநிதி என இருவர் உண்டு. செல்வத்தின் அதிபதி என்று கூறக்கூடிய குபேரனுக்கு செல்வத்தின் கடவுள் திருமகள் வெண்சங்கினையும், அறிவுக்கடவுளான கலைமகள் வெண் தாமரையையும் வரமாக தந்தனர். இதனை குபேரன் தன் நிர்வாக பணிக்காக தேவகணங்களாக மாற்றி வெண்சங்கை சங்க நிதியாகவும், வெண் தாமரையை பத்மநிதியாகவும் மாற்றி தன்னுடைய நிர்வாக பணிக்காக தன்னோடு வைத்துள்ளார்.

இவர்களுடைய வேலை கோவிலுக்கு வருபவர்களுக்கு எவ்வளவு செல்வத்தை கொடுக்க வேண்டும் என்பதை சங்கநிதி முடிவு செய்து குபேரனிடம் சமர்ப்பிப்பார். கோவிலுக்கு வருபவர்களுக்கு எந்த அளவு அறிவினை கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர் பத்மநிதியாவார். தற்போது நாங்கள் கண்டறிந்த பத்மநிதி சிற்பமானது 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்தவகையான புடைப்பு சிற்பங்கள் தென்தமிழகத்தில் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.

வியப்பு அளிக்கும் செங்கற்கள்

இங்குள்ள விநாயகர் சிற்பம் 4 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகரின் தலையில் கிரீடமும், அகன்ற காதுகளும், நீண்டு சுருண்ட துதிக்கையும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.

4 கரங்களுடன் யோக வீரபத்திரர் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்ட நந்தி சிற்பம் மேற்கு நோக்கி காணப்படுகிறது. ஆனால் சிவலிங்கம் எதுவும் இல்லை. மேற்கண்ட சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படுகிறது. இவ்விடம் முழுக்க செங்கற்கள் குவியல், குவியலாகவும் சிதைந்தும் காணப்படுகிறது. 1 அடி நீளமும், ¾, ½ அடி அகலமும் கொண்ட செங்கற்கள் இங்கு காணப்படுவது மிகவும் வியப்பாக உள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது இங்கு ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்க வேண்டும் என உறுதிப்பட கூறலாம்.

மேலும் தற்போது இந்த கோவில் இந்நிலையிலும் வழிபாட்டில் தான் இருந்து வருகிறது. இங்குள்ள சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்