< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலைக்கு 894 சிறப்பு பஸ்கள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு 894 சிறப்பு பஸ்கள்

தினத்தந்தி
|
4 Dec 2022 12:15 AM IST

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவண்ணாமலைக்கு 894 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

விழுப்புரம்:

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருநாள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

இத்திருநாளின்போது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இவர்களின் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் அர்ஜூணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

894 சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் கார்த்திகை மகா தீபத்திருவிழாவும் மற்றும் 7-ந் தேதி பவுர்ணமி கிரிவலமும் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள். இதனால் அவர்களின் பஸ் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் விழுப்புரம் மண்டலம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம்- திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பஸ்களும், திண்டிவனம்- திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பஸ்களும், புதுச்சேரி- திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பஸ்களும், திருக்கோவிலூர்- திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பஸ்களும், கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பஸ்களும் ஆக மொத்தம் 894 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களின் இயக்கத்தை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்