காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 88 சதவீதமாணவர்கள் தேர்ச்சி
|காஞ்சீபுரம் மாவட்டத்தின் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6,516 மாணவர்களும், 7,002 மாணவிகளும் என மொத்தம் 13,518 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுதேர்வு எழுதினர்.
இதில் பொதுப் பாடத் தேர்வில் 12,882 மாணவ, மாணவிகளும் தொழில் பாடப் பிரிவில் 636 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.
இதில் 12,119 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். சராசரியாக 91.80 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை (2019-20) விட 0.2 சதவீதம் குறைவாக பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.66, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் சதவீதம் மாணவர்களை விட 6.08 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாவட்டத்தின் தரம் 31-வது இடத்தில் உள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10-ம் வகுப்பு அரசுப் பொது தேர்வை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7,873 மாணவர்கள், 7,593 மாணவிகள் என மொத்தம் 15,466 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 13,684 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். சராசரியாக 88.48 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 83.75, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் சதவீதம் மாணவர்களை விட 9.63 சதவீதம் கூடுதலாக உள்ளது. இந்த ஆண்டு மாவட்டத்தின் தரம் 28-வது இடத்தில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.