மதுரை
88 விவசாயிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பில் அரசு மானியத்துடன் நவீன எந்திரங்கள்- அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
|88 விவசாயிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன எந்திரங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
88 விவசாயிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன எந்திரங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
பண்ணை குட்டைகள்
மதுரை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக, விவசாயிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மானிய உதவியுடன், பவர் டிரில்லர் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி, 88 விவசாயிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் பவர் டிரில்லர் எந்திரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பெருக்கும் நோக்கில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறு,குறு விவசாயிகளின் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு தேவையான நீர் ஆதாரத்தினை உருவாக்குதற்கு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல் அமைச்சரின் சூரிய சக்தி பம்ப் அமைக்கும் திட்டம், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மானியம்
மேலும் விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை தீர்வு மற்றும் விளைச்சலை பெருக்கும் விதமாக வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் மகளிர் அல்லது சிறு,குறு விவசாயிகள் அல்லது ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 50 சதவீதம் மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் திட்டத்தை இன்று (நேற்று) காலை சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 86 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் 88 பவர் டில்லர்கள், ரூ.74 லட்சத்து 80 ஆயிரம் அரசு மானியத்தில் 88 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு எப்போதும் உழவர்களின் உற்ற தோழனாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார். அதில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முரேஷ் குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.