கள்ளக்குறிச்சி
சின்னசேலத்திற்கு 876 டன் யூரியா வந்தது
|சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்திற்கு 876 டன் யூரியா வந்தது.
சின்னசேலம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நடப்பு பருவத்திற்கு தேவையான 876 மெட்ரிக் டன் யூரியா சென்னை உர கிடங்கில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் ஆய்வு செய்தார். பின்னர் அதனை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி வெளியட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2 ஆயிரத்து 688 மெட்ரிக் டன், டி.ஏ.பி.ஆயிரத்து 212 மெட்ரிக் டன், பொட்டாஷ் ஆயிரத்து 363 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 838 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 6 ஆயிரத்து 241 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.