< Back
மாநில செய்திகள்
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 870 கனஅடி நீர் திறப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 870 கனஅடி நீர் திறப்பு

தினத்தந்தி
|
24 Aug 2022 8:36 PM GMT

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 870 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து வினாடிக்கு 870 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

பரவலாக மழை

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும், இதமான குளிர் காற்றும் வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றதால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. மழையால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகின் றன. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பெருஞ்சாணி பகுதியில் அதிகபட்சமாக 7.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர மற்றும் நீர்பிடிப்பு பகுகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிள் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்ட இன்னும் ஒருசில அடிகள் மட்டுமே உள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே பெருஞ்சாணி அணை 42 அடியை கடந்ததை அடுத்து கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 7.2, புத்தன் அணை- 7, சிற்றார் 1- 2.6, சிற்றார் 2- 4, மாம்பழத்துறையாறு- 1, தக்கலை- 2.4, இரணியல்- 1.6, பாலமோர்- 6.4, ஆரல்வாய்மொழி- 2.4, கோழிப்போர்விளை- 2.4, அடையாமடை- 2.4, முள்ளங்கினாவிளை- 6.4, களியல்- 2.4, பூதப்பாண்டி- 2.6, நாகர்கோவில்- 1, குளச்சல்- 2, சுருளகோடு- 4.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அதேசமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 610 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 560 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 269 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 310 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டன.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வரத்தும், அணைகளில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளன. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 4.4 கன அடி தண்ணீர் வந்தது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்