< Back
மாநில செய்திகள்
84 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன
திருச்சி
மாநில செய்திகள்

84 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன

தினத்தந்தி
|
30 Jan 2023 2:15 AM IST

84 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு திட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு, பஞ்சப்பூர் ஏரி, திருவெறும்பூர், கிளியூர், கூத்தைப்பார், துறையூர் நீர் நிலைகள் என 15 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என வனத்துறையினருடன் சேர்ந்து 100 பேர் 4 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இரண்டாம் கட்டமாக வருகிற மார்ச் மாதம் 4 மற்றும் 5-ந் தேதிகளில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பின் மூலம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் குறித்த விவரங்களும், அரிய வகை பறவைகள், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை கண்டறிந்து பாதுகாக்க முடியும்.

புகைப்படங்கள் பதிவேற்றம்

மேலும் இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்து உதவி வன பாதுகாப்பு அலுவலர் சம்பத்குமார் கூறுகையில், பறவைகளின் உணவு மற்றும் உறைவிடம் குறித்து கண்டறியவே இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மட்டும் 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கணக்கெடுக்கப்பட்ட பறவைகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் அனைத்தும் மக்கள் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்யப்படும், என்று கூறினார்.

துறையூர்

துறையூரில் வன சரகர் பொன்னுசாமி தலைமையில் 14 பேர் அடங்கிய குழுவினர் துறையூரில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி மற்றும் ஆழத்துறையன்பட்டி ஏரி, சிக்கத்தம்பூர் ஏரி, கீரம்பூர் ஏரி ஆகிய பகுதிகளில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பெரிய ஏரியில் 84 வகையான பறவைகளும், ஆழத்துடையான்பட்டியில் 44 வகையான பறவைகளும், சிக்கதம்பூர் ஏரியில் 38 வகையான பறவைகளும், கீரம்பூர் ஏரியில் 30 வகையான பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. பாம்புதாரா, பச்சை பஞ்சுருட்டான், முக்குளிப்பான், சிறிய முக்குளிப்பான், நீர்க்காகம் உள்ளிட்ட பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் உள்பட பல்வேறு வகையான பறவைகள் உள்ளன என்று துறையூர் வன சரகர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்