தமிழகத்தில் 2023-ல் 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை
|தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் 2019-ல் 78,000 ஆக இருந்து 2023-ல் 83,000 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது 2040-ல் 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் புற்றுநோய் தாக்கத்தில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் ஒரு லட்சம் பேரில் 135 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. தமிழகத்தில் புற்றுநோயின் தாக்கம் 2019-ல் 78,000 ஆக இருந்து 2023-ல் 83,000 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு வயிற்று புற்றுநோயும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் காணப்படுகிறது. ஒரு லட்சம் ஆண்களில் 6.5 பேருக்கு வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை கூறுகிறது. மேலும் ஒரு லட்சம் ஆண்களில் 6.4 பேருக்கு வாய் புற்றுநோயும், 6.3 பேருக்கு நுரையீரல் புற்றுநோயும், 5.4 பேருக்கு பெருங்குடல் புற்றுநோயும், 4.4 பேருக்கு நாக்கில் புற்றுநோயும் ஏற்படுகிறது.
பெண்களை பொறுத்தவரை ஒரு லட்சம் பேரில் 27 பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் ஒரு லட்சம் பெண்களில் 17.7 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், 5.8 பேருக்கு கருமுட்டைபை புற்றுநோயும் 4.1 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோயும், 3.8 பேருக்கு பெருங்குடல் புற்றுநோயும் ஏற்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை ஒரு லட்சம் பெண்களில் 52 பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 2001 வரை தமிழகத்தில் பெண்களை அதிகம் தாக்கிய புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருந்து வந்த நிலையில் தற்போது மார்பக புற்றுநோய் முதலிடத்தை பிடித்துள்ளது.