திருநெல்வேலி
ரூ.812 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
|நெல்லை மாநகர பகுதியில் ரூ.812 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திட்டப்பணிகள் தொடக்க விழா
நெல்லை மாநகராட்சியில் ரூ.10.57 கோடி மதிப்பில் டவுன் போஸ் தினசரி சந்தை மேம்படுத்தும் பணிகள் பகுதி-2, ரூ.5.14 கோடியில் நெல்லை டவுன் மாநகராட்சி மருத்துவமனை அருகில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவற்கான கட்டிடம், ரூ.14.96 கோடியில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் அருகே வணிகவளாக கட்டிடம், ரூ.50 லட்சத்தில் மேலப்பாளையம் ஆசாத் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம், ரூ.1 கோடியில் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் காமராஜர் தெருவில் உள்ள பிராந்தான்குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பழுதான கட்டிடங்களை இடித்துவிட்டு தரைத்தளத்தில் 5 புதிய வகுப்பறைகள் உள்பட நெல்லை மாநகர பகுதிகளில் சுமார் ரூ.122 கோடியே 31 லட்சம் மதிப்பில் முடிவடைந்த வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
அமைச்சர் கே.என்.நேரு
இதற்காக பாளையங்கோட்டை நேருஜி அரங்கில் நடந்த விழாவுக்கு மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்றார். ஞானதிரவியம் எம்.பி. சிறப்புரையாற்றினார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது கூறியதாவது:-
நெல்லை மாநகராட்சியில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் பாப்பாக்குடி, கடையம், கீழப்பாவூர் பகுதிகளில் 163 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.46.55 கோடியிலும், மானூர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் 150 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.32.40 கோடியிலும், நெல்லை மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.295 கோடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார்.
அதேபோல் அம்பை ஒன்றியத்தில் ரூ.12.5 கோடியிலும், மானூர் ஒன்றியத்தில் ரூ.19.25 கோடியிலும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் ரூ.4.14 கோடியிலும் உள்பட நெல்லை மாவட்டத்தில் சுமார் ரூ.682 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரூ.350 கோடிக்கு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
நிதி ஒதுக்கீடு
களக்காடு நகராட்சி மற்றும் நாங்குநேரி, ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி, திருக்குறுங்குடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, பணகுடி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு புதிதாக ரூ.423 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த மதிப்பீடு செய்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
60 சதவீதம் மக்கள் நகர்புறத்துக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் இந்த பணிகள் நிறைவடைந்து தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்கள் கணக்கெடுத்து கொடுக்கிறோம். அதற்கு முடிந்த அளவிற்கு நிதி அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் தொழில்நுட்ப மையம்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 'வேகம் என்பதன் மறுஉருவம் அமைச்சர் கே.என்.நேரு தான். அனைத்து பணிகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நெல்லை வந்த அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழக முதல்-அமைச்சர் தென்மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். உதாரணத்துக்கு நான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது கங்கைகொண்டானில் மிகப்பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டது. நெல்லையில் விரைவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம் உருவாக உள்ளது. நெல்லையை மையமாக வைத்து எதிர்கால சந்ததிகளுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.
முடிவில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
அடிக்கல் நாட்டுவிழா
முன்னதாக பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் ரூ.663.92 கோடி மதிப்பீட்டில் நெல்லை மாநகராட்சி பாதாளச்சாக்கடை திட்டப்பணி பகுதி-3, ரூ.2.36 கோடியில் நெல்லை மாநகராட்சி பிராந்தன்குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பெருமாள்சன்னதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் பள்ளிக்கட்டிடம் கட்டும் பணி, ரூ.23.43 கோடி மதிப்பில் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் 10 நீர் உறுஞ்சு கிணறுகள் அமைத்து பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டல விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் கூடுதல்குடிநீர் வழங்கும் திட்டப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மண்டல தலைவர்கள் மகேஸ்வரி, ரேவதி பிரபு, பிரான்சிஸ், கஜிதா இக்லாம் பாசிலா, விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பஸ்நிலையம்
முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.