சென்னை
80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு : சென்னை ஐ.ஐ.டி.யில் 'சாரங்' கலாசார விழா தொடக்கம் 15-ந்தேதி வரை நடக்கிறது
|சென்னை ஐ.ஐ.டி.யில் ‘சாரங்' கலாசார விழா நேற்று தொடங்கியது. 80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் இந்த விழா, வருகிற 15-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் 'சாரங்' என்று அழைக்கப்படும் கலாசார விழாவும், 'சாஸ்த்ரா' என்று சொல்லப்படும் தொழில்நுட்ப விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக இந்த விழாக்கள் நடத்த முடியாமல் போனது. ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு நேரடியாக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கிறது.
28-வது 'சாரங்' கலாசார விழா நேற்று தொடங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்திருக்கிறது. போட்டிகள், பயிற்சிகள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து திறமையான நிகழ்ச்சிகள் என 100-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை இந்த கலாசார விழாவில் நடத்த உள்ளனர்.
இந்த விழா குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வீ.காமகோடி கூறும்போது, "நாட்டின் கலை, கலாசாரங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க இருக்கிறது. இந்த 5 நாட்கள் விழாவில், பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கு எந்த திட்டமும் இந்த ஆண்டில் செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டில் இந்த கலாசார விழாவில் பொங்கல் விழா நடத்துவது குறித்து திட்டமிடுவோம்" என்றார்.
கலாசார விழா ஒருங்கிணைப்பாளர் மாணவி ஜெய் சந்தோஷினி கூறும்போது, "சாரங் முழுக்க, முழுக்க மாணவர்களுக்காக மட்டுமே மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கலை நிகழ்ச்சி ஆகும். வருகிற 13-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் முறையாக பறை இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. மேலும் கொரியன் திருவிழா உள்ளிட்ட சில புதிய நிகழ்ச்சிகளும் இதில் நடைபெற இருக்கின்றன" என்றார்.