< Back
மாநில செய்திகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 80 சதவீதம் நீர் இருப்பு - கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. குறைவு
சென்னை
மாநில செய்திகள்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 80 சதவீதம் நீர் இருப்பு - கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. குறைவு

தினத்தந்தி
|
20 Nov 2022 6:17 PM IST

பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக்கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முழு கொள்ளளவான 3.231 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. இதனால் 22 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 1.865 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

புழல் ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3.300 டி.எம்.சி.யில் தற்போது 2.624 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு கொள்ளளவான 3.655 டி.எம்.சி.யில் தற்போது 2.635 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டைவிட 1.20 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக உள்ளது.

சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு 781 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 417 மில்லியன் கண்ணாடி அடியாக உள்ளது.

கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில் முழு அளவில் 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் கடந்த ஆண்டு போலவே சேமிப்பு உள்ளது.

வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 679.2 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இந்த 6 ஏரிகளில் நீர் இருப்பு தற்போது 8.769 டி.எம்.சி. ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 9.762 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அதாவது தற்போது 1 டி.எம்.சி. நீர் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது.

மேலும் செய்திகள்