நாமக்கல்
குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 80 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
|குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 80 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 80 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தண்ணீர் புகுந்தது
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் குமாரபாளையம் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் மாலை கரையோர பகுதிகளான காவிரி கலைமகள் தெரு, இந்திரா நகர், அண்ணா நகர், மணிமேகலை தெரு பகுதியை சேர்ந்த சுமார் 135 பேர் புத்தர் வீதி பள்ளிக்கூடம், சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடம், சின்னப்பநாயக்கன்பாளையம் பள்ளிக்கூடம், ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் உள்ள சுமார் 80 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில வீடுகளில் முகாமிற்கு செல்லாமல் இருந்தவர்களை படகு மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆறுதல்
இதற்கிடையே திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி காவிரி நீரில் மூழ்கியுள்ள குடியிருப்பு பகுதி மற்றும் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், தியாகராஜன் ஆகியோர் உடன் சென்றனர்.