பெரம்பலூர்
80 மூட்டைகள் மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசம்
|80 மூட்டைகள் மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது.
மங்களமேடு:
மக்காச்சோளம்
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை மங்கலம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம்(வயது 55) குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். நேற்று மதியம் அவர் மக்காச்சோளத்தை அறுவடை செய்துள்ளார்.
மேலும் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை மூட்டைகளாக கட்டி, தனது நிலத்தில் வைத்துவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக அவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, பக்கத்து காட்டில் வைக்கப்பட்ட தீ ஆறுமுகத்தின் சோளக்காட்டில் பரவியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த மக்காச்சோள மூட்டைகளிலும் தீ பரவியது.
எரிந்து நாசம்
இது குறித்து ஆறுமுகம், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் சுமார் 80 மூட்டைகளில் இருந்த மக்காச்சோளம் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.