விழுப்புரம்
8 கிராமமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
|விழுப்புரம் அருகே பஸ்நிறுத்தத்தை இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலைமறியல் செய்யமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்
4 வழிச்சாலை அமைக்கும் பணி
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.6 ஆயிரத்து 431 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இப்பணி முடிவடைந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் 4 வழிச்சாலை தொடங்கும் இடமான விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்த பஸ் நிறுத்தத்தை சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அப்பால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கிராமமக்கள் எதிர்ப்பு
ஆனால் பஸ் நிறுத்தத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் மீண்டும் பழைய இடத்திலேயே பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என ஜானகிபுரம் மற்றும் சுற்றியுள்ள 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை வலியுறுத்தி அவர்கள் கடந்த வாரம் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் சாலைமறியலில் ஈடுபடுவதற்காக ஜானகிபுரத்தில் திரண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைப்பது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.