< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் நூதனமுறையில்‌ 8 பவுன் நகை திருட்டு
நாமக்கல்
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் நூதனமுறையில்‌ 8 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
7 Sept 2022 10:10 PM IST

பரமத்திவேலூர் அருகே மூதாட்டியிடம் நூதனமுறையில் 8 பவுன் நகையை பெண் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரமத்திவேலூர்

தனியாக வசித்த மூதாட்டி

பரமத்திவேலூர் தாலுகா நெட்டையாம்பாளையம், பொன்நகரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி எட்டம்மாள் (வயது 63). பழனியப்பன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.

இவரது மகன் தியாகராஜன் (35). இவர் ஈரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தனது தாயை வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மூதாட்டியிடம் வந்து தண்ணீர் கேட்ட போது அவருக்கு எட்டம்மாள் தண்ணீர் கொடுத்துள்ளார்.

8 பவுன் நகை

இந்தநிலையில் தண்ணீரை வாங்கி குடித்த அந்த அடையாளம் தெரியாத பெண் மூதாட்டி காலில் விழுந்து தண்ணீர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாமல், சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார். தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனது மகன் தியாகராஜனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

அதன்பேரில் வேலூர் போலீசார் நூதன முறையில் 8 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம பெண் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு காலில் விழுந்து நன்றி சொல்வது போல் நடித்து 8 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடிச்சென்ற‌ சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்