பெரம்பலூர்
தலைமை ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டு
|தலைமை ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டுபோனது.
வேலைக்கு சென்றனர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 37). இவரது மனைவி கயல்விழி (33). கிருஷ்ணகுமார் தனது குடும்பத்தினருடன் சொந்த வீட்டில் முதல் தளத்தில் தங்கியுள்ளார். தரைத்தளத்தில் உள்ள வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வருகின்றனர்.
கிருஷ்ணகுமார் பெரம்பலூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கயல்விழி பெரம்பலூரில் தனியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவர்கள் 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் கிருஷ்ணகுமார் வீட்டிற்கு வந்தார்.
நகை-பணம் திருட்டு
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொடர் திருட்டு
தற்போது திருட்டு நடந்த வீட்டின் அருகே உள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் இந்த பகுதியில் ரோந்து பணியை அதிகப்படுத்தவும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை அருகே இந்தப்பகுதி இருப்பதால் மர்மநபர்கள் நோட்டமிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.