பெரம்பலூர்
தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8½ பவுன் சங்கிலிகள் பறிப்பு
|தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 8½ பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஸ்கூட்டரை வழிமறித்தனர்
பெரம்பலூர் மாவட்டம், புது வேலூரை சேர்ந்தவர் ரவி என்ற ராஜ்குமார். இவரது மனைவி சுதா (வயது 34). இவர் சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டையட்டீசியனாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை மருத்துவமனைக்கு பணிக்கு வந்த சுதா மாலையில் பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
சிறுவாச்சூர்-புதுவேலூர் சாலையில் செல்லியம்பாளையம் பிரிவு சாலை அருகே சுதா சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் சுதாவின் ஸ்கூட்டரை வழிமறித்தனர்.
கத்தியை காட்டி மிரட்டி...
பின்னர் அவர்கள் சுதாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச்சங்கிலி, 1½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்ததோடு, கையில் வைத்திருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பின்னர் சுதா தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி, புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கத்தியை காட்டி மிரட்டி மருத்துவமனை பெண் ஊழியரிடம் மர்மநபர்கள் சங்கிலிகளை பறித்துச்சென்ற சம்பவம், பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெரம்பலூரில் தொடர் திருட்டுகள் அரங்கேறிய நிலையில், தற்போது தனியாக செல்லும் பெண்ணிடம் சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.