ராணிப்பேட்டை
கணவருடன் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு
|ஆற்காடு அருகே கணவருடன் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த திமிரி எம்.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 62). ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மனைவி ஜாப்லின்மேரி (55). இவர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராணிப்பேட்டை சிப்காட்டில் வசித்துவரும் தங்களது மகளை பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இரவு தங்களது வீட்டிற்கு வந்தனர். ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை அருகே சென்ற போது, மோட்டார்சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராமன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து உள்ளனர்.
பின்னர் ஜாப்லின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயின் மற்றும் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராமன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.