மதுரை
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 8 பேர் மதுரை வந்தனர்- குண்டு சத்தங்களால் பதற்றம் அடைந்ததாக பேட்டி
|இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த 8 பேருக்கு விமான நிலையத்தில் கலெக்டர் வரவேற்பு அளித்தார். மேலும் இஸ்ரேலில் துப்பாக்கி சுடும், குண்டு சத்தங்களால் பதற்றம் அடைந்ததாக கூறினர்.
இஸ்ரேல் போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில், இஸ்ரேலில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா திரும்பியவர்களில் 22 பேர் தமிழர்கள். அவர்கள், டெல்லியில் இருந்து தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் திருச்சியை சேர்ந்த சாந்தகுமார் மகள் தன்யா ரேச்சல் (வயது 27), ரவிசந்திரன் மகள் நிர்த்திகா (26), சக்திவேல் மகள் ஷாலினி (25), மதுரை கப்பலூரை சேர்ந்த முனியாண்டி மகன் பகவதி (41), மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (39), அவருடைய மனைவி ஏஞ்சலா ஆசிர் (32), மகள் டெப்பிலா மிராக்கலின் (4), சிவகங்கை காளையார்கோவில் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மனோஜ் (27) ஆகிய 8 பேர் நேற்று காலை டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்கள் இஸ்ரேலில் உள்ள பெர்லான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்துள்ளனர். அவர்களை, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு தங்களது ஊருக்கு சென்றனர்.
ஆராய்ச்சி பணி
இஸ்ரேல் போர் குறித்து மதுரையை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பகவதி கூறும்போது,
"இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ் உள்ள பெர்லான் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஆராய்ச்சி பணி மேற்கொண்டு வருகிறேன். அங்கு போர் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தற்காலிகமாக இந்தியா திரும்பியுள்ளோம். அங்கு சூழல் சரியான பிறகு மீண்டும் அங்கு சென்று எங்கள் ஆராய்ச்சி, படிப்புகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்கு அவர்களும் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். மத்திய, தமிழக அரசு இணைந்து எங்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது. போர் பதற்றம் முடிந்த பிறகு நிச்சயம் மீண்டும் எங்களின் ஆராய்ச்சியை அங்கு மேற்கொள்வோம்"என்றார்.
துப்பாக்கி சுடும் சத்தம்
ஆராய்ச்சி மாணவி ஏஞ்சலா ஆசிர், நான் கடந்த 2016-ல் இருந்து இஸ்ரேலில் இருக்கிறேன். போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. துப்பாக்கி சுடும், குண்டு சத்தங்களை கேட்கும் போது வரும் பதற்றங்கள் தான் இருந்ததே தவிர எந்தவித குழப்பமும் இல்லாமல் மத்திய- மாநில அரசுகள் எங்களை அழைத்து வந்தனர். போர் பதற்றம் முடிந்த பின்னர் இஸ்ரேல் செல்வோம் என்றார்.