சேலம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
|சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த பெரியபுத்தூரை சேர்ந்தவர் சாந்தி (வயது 35). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்னர் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறுகையில், எனது கணவர் பரமசிவம் (40) வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுக்கம்பட்டியை சேர்ந்த எனது அண்ணன் சீனிவாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டார்.
இதனால் எனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி கொடுத்தேன். மேலும், மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 6 பவுன் நகையையும் கொடுத்தேன். அதன்பிறகு அவைகளை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது அண்ணனிடம் இருந்து பணம், நகையை மீட்டுத்தர வேண்டும், என்றார்.
ஒரே குடும்பத்தினர்
இதேபோல், ஓமலூர் அருகே திண்ணப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் (47), இவரது மனைவி முத்துமாரி (37), இவர்களது மகன் சிலம்பரசன் (15) ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றனர். பின்னர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில், கிருஷ்ணன் தனக்கு சொந்தமான ¾ ஏக்கர் நிலத்தை அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அதேசமயம், அந்த நிலத்தை விற்பனை செய்து தருமாறு புரோக்கர் ஒருவரிடமும் கிருஷ்ணன் கூறி வந்துள்ளார். இதையடுத்து புரோக்கர், கிருஷ்ணனிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கிய நபரிடம் உனக்கே நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறி அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் தனது நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு தெரிவித்தபோது குத்தகைக்கு வாங்கிய நபர் நிலத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
விவசாயி
இதேபோல், சேலம் அருகே பெருமாம்பட்டி நத்தக்காட்டை சேர்ந்தவர் சுந்தரராஜ். விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேறு ஒரு நபருக்காக மின் கம்பம் அமைத்துள்ளதாகவும், அதை அகற்ற வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி மனு கொடுக்க அழைத்து சென்றனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வெவ்வேறு கோரிக்கைகைள வலியுறுத்தி அடுத்தடுத்து 8 பேர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.