சேலம்
தந்தை-மகனை தாக்கிய 8 பேருக்கு சிறை சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு
|தந்தை-மகனை தாக்கிய 8 பேருக்கு சிறை தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சங்ககிரி
எடப்பாடி அருகே புதுப்பட்டி தோட்டக்காடு வெள்ளரி வெள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 27), விவசாயி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கரத்தினம் (41) என்பவரின் 77 சென்ட் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். குத்தகை காலம் முடிந்து தங்கரத்தினம், தனது விவசாய நிலத்தை திருப்பி கேட்ட போது செங்கோட்டையன் விவசாய நிலத்தை திருப்பி தராமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி தங்கரத்தினம், சின்ன பிள்ளை (56), கந்தாயி (37), சிவகாமி (43), சித்தையன் (45), சண்முகம் (63), குமார் (43), சாந்தா (43) ஆகியோர் ஒன்று சேர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரது தந்தை சுப்பிரமணி ஆகியோரை அரிவாள் மற்றும் தடி ஆகியவற்றால் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இது குறித்து பூலாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சங்ககிரி சப்-கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட தங்கரத்தினம், சின்ன பிள்ளை, கந்தாயி, சிவகாமி, ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சித்தையன், சண்முகம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500அபராதமும், குமார், சாந்தா ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு கூறினார்.