செங்கல்பட்டு
விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம்: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
|அச்சரப்பாக்கம் அருகே விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. பரிந்துரையின் படி 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (வயது 40) மற்றும் பனையூரை சேர்ந்த ராஜேஷ் (27) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வினோத் சாந்தாராம் பரிந்துரையின் படி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.